சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
3.059   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   அர விரி கோடல் நீடல்
பண் - பஞ்சமம்   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=pM-KCxf4Vn0
5.022   திருநாவுக்கரசர்   தேவாரம்   பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி
பண் - திருக்குறுந்தொகை   (திருகுடமூக்கு (கும்பகோணம்) கும்பேசுவரர் மங்களநாயகியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=RPv3ou9s8KE

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.059   அர விரி கோடல் நீடல்  
பண் - பஞ்சமம்   (திருத்தலம் திருகுடமூக்கு (கும்பகோணம்) ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு கும்பேசுவரர் திருவடிகள் போற்றி )
அர விரி கோடல் நீடல் அணி காவிரியாற்று அயலே,
மர விரி போது, மௌவல், மணமல்லிகை, கள் அவிழும்
குர, விரி சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இர விரி திங்கள் சூடி இருந்தான்; அவன் எம் இறையே.

[1]
ஓத்து அரவங்களோடும் ஒலி காவிரி ஆர்த்து, அயலே
பூத்து, அரவங்களோடும், புகை கொண்டு அடி போற்றி, நல்ல
கூத்து அரவங்கள் ஓவா, குழகன், குடமூக்கு இடமா,
ஏத்து அரவங்கள் செய்ய, இருந்தான்; அவன் எம் இறையே.

[2]
மயில் பெடை புல்கி ஆல, மணல் மேல் மட அன்னம் மல்கும்,
பயில் பெடை வண்டு பண் செய் பழங்காவிரிப் பைம்பொழில் வாய்,
குயில் பெடையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
இயலொடு வானம் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.

[3]
மிக்கு அரை தாழ வேங்கை உரி ஆர்த்து, உமையாள் வெருவ,
அக்கு, அரவு, ஆமை, ஏனமருப்போடு, அவை பூண்டு, அழகு ஆர்
கொக்கரையோடு பாடல் உடையான்; குடமூக்கு இடமா,
எக்கரையாரும் ஏத்த, இருந்தான்; அவன் எம் இறையே.

[4]
வடிவு உடை வாள்-தடங்கண் உமை அஞ்ச, ஒர் வாரணத்தைப்
பொடி அணி மேனி மூட உரிகொண்டவன்; புன்சடையான்;
கொடி நெடுமாடம் ஓங்கும், குழகன், குடமூக்கு இடமா,
இடி படு வானம் ஏத்த இருந்தான்; அவன் எம் இறையே.

[5]
கழை வளர் கவ்வை முத்தம் கமழ் காவிரியாற்று அயலே,
தழை வளர் மாவின், நல்ல பலவின், கனிகள் தயங்கும்
குழை வளர் சோலை சூழ்ந்த, குழகன், குடமூக்கு இடமா,
இழை வளர் மங்கையோடும் இருந்தான்; அவன் எம் இறையே.

[6]
மலை மலி மங்கை பாகம் மகிழ்ந்தான்; எழில் வையம் உய்யச்
சிலை மலி வெங்கணையால் சிதைத்தான், புரம் மூன்றினையும்;
குலை மலி தண்பலவின் பழம் வீழ் குடமூக்கு இடமா,
இலை மலி சூலம் ஏந்தி இருந்தான்; அவன் எம் இறையே.

[7]
நெடு முடிபத்து உடைய நிகழ் வாள் அரக்கன்(ன்) உடலைப்
படும் இடர் கண்டு அயர, பருமால் வரைக்கீழ் அடர்த்தான்;
கொடு மடல் தங்கு தெங்கு பழம் வீழ் குடமூக்கு இடமா,
இடு மணல் எக்கர் சூழ இருந்தான்; அவன் எம் இறையே.

[8]
ஆர் எரி ஆழியானும் அலரானும் அளப்பு அரிய
நீர் இரி புன்சடை மேல் நிரம்பா மதி சூடி, நல்ல
கூர் எரி ஆகி நீண்ட குழகன்; குடமூக்கு இடமா,
ஈர் உரி கோவணத்தோடு இருந்தான்; அவன் எம் இறையே.

[9]
மூடிய சீவரத்தார், முது மட்டையர், மோட்டு அமணர்
நாடிய தேவர் எல்லாம் நயந்து ஏத்திய நன் நலத்தான்,
கூடிய குன்றம் எல்லாம் உடையான், குடமூக்கு இடமா,
ஏடு அலர் கொன்றை சூடி இருந்தான்-அவன் எம் இறையே.

[10]
வெண்கொடி மாடம் ஓங்கு விறல் வெங்குரு நன் நகரான்-
நண்பொடு நின்ற சீரான், தமிழ் ஞானசம்பந்தன்-நல்ல
தண் குடமூக்கு அமர்ந்தான் அடி சேர் தமிழ் பத்தும் வல்லார்
விண் புடை மேல் உலகம் வியப்பு எய்துவர்; வீடு எளிதே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.022   பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருகுடமூக்கு (கும்பகோணம்) ; (திருத்தலம் அருள்தரு மங்களநாயகியம்மை உடனுறை அருள்மிகு கும்பேசுவரர் திருவடிகள் போற்றி )
பூ வணத்தவன்; புண்ணியன்; நண்ணி அங்கு
ஆவணத்து உடையான், அடியார்களை;-
தீ வணத் திருநீறு மெய்பூசி, ஓர்
கோவணத்து உடையான், குடமூக்கிலே.

[1]
பூத்து ஆடிக் கழியாதே நீர், பூமியீர்,
தீத்து ஆடி(த்) திறம் சிந்தையுள் வைம்மினோ!-
வேர்த்து ஆடும் காளிதன் விசை தீர்க! என்று
கூத்து ஆடி(ய்) உறையும் குடமூக்கிலே.

[2]
நங்கையாள் உமையாள் உறை நாதனார்-
அம் கையாளொடு அறுபதம் தாழ்சடைக்
கங்கையாள் அவள், கன்னி எனப்படும்
கொங்கையாள், உறையும் குடமூக்கிலே.

[3]
ஓதா நாவன் திறத்தை உரைத்திரேல்,
ஏதானும்(ம்) இனிது ஆகும்; இயமுனை-
சேதா ஏறு உடையான் அமர்ந்த(வ்) இடம்-
கோதாவிரி உறையும் குடமூக்கிலே.

[4]
நக்க(அ)அரையனை, நாள்தொறும் நன் நெஞ்சே!
வக்கரை உறைவானை, வணங்கு, நீ!-
அக்கு அரையோடு அரவு அரை ஆர்த்தவன்,
கொக்கரை உடையான், குடமூக்கிலே.

[5]
துறவி நெஞ்சினர் ஆகிய தொண்டர்காள்!
பிறவி நீங்கப் பிதற்றுமின், பித்தராய்-!
மறவனாய்ப் பார்த்தன்மேல் கணை தொட்ட எம்
குறவனார் உறையும் குடமூக்கிலே.

[6]
தொண்டர் ஆகித் தொழுது பணிமினோ,
பண்டை வல்வினை பற்று அற வேண்டுவீர்!-
விண்டவர் புரம் மூன்று ஒரு மாத்திரைக்
கொண்டவன்(ன்) உறையும் குடமூக்கிலே.

[7]
காமியம் செய்து காலம் கழியாதே,
ஓமியம் செய்து அங்கு உள்ளத்து உணர்மினோ!-
சாமியோடு, சர(ச்) சுவதி அவள்,
கோமியும்(ம்), உறையும் குடமூக்கிலே.

[8]
சிரமம் செய்து, சிவனுக்குப் பத்தராய்ப்
பரமனைப் பல நாளும் பயிற்றுமின்!-
பிரமன் மாலொடு மற்று ஒழிந்தார்க்கு எலாம்
குரவனார் உறையும் குடமூக்கிலே.

[9]
அன்றுதான் அரக்கன் கயிலாயத்தைச்
சென்று தான் எடுக்க(வ்), உமை அஞ்சலும்
நன்று தான் நக்கு, நல்விரல் ஊன்றி, பின்
கொன்று, கீதம் கேட்டான், குடமூக்கிலே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin @ sivaya.org

thirumurai list